மெய்யியல் அன்றி அரசியல் தன்னையும்
செய்வினை யின்றிப் புறந்தள்ளி விட்டு
கூலி உயர்வை மட்டும் பிடிக்கும்
போலிப் புரட்சி வாதிகள் தம்மையும்
வழியின்றி மறிக்கும் உலக மயத்தில்
அழியும் வாழ்வினால் வாடும் தோழரே!
சமதர்மம் ஒன்றே உழைப்பவர் தமக்குத்
தமதுயிர் மேலாம் விடுதலை யளிக்கும்
என்பதை யுணர்ந்து ஒற்றுமை யுடனே
மூன்று வழியிலும் போரிட எழுவீர்
(தத்துவார்த்தப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் செயலிழக்கச் செய்தும் புறந்தள்ளி விட்டும், கூலி உயர்வை மட்டுமே செயலில் கொண்டுள்ள போலிப் புரட்சிவாதிகளை, (கூலி உயர்வுப் போராட்டமும் செய்ய முடியாதபடி) இன்றைய உலக மயமாக்கல் கொள்கை முடக்கிப் போட்டு வைத்து இருப்பதானால் (கூலி உயர்வும் கேட்க முடியாமல்) வாழ்க்கைத் தரம் தாழ்ந்து, வாடும் தோழர்களே! சோஷலிச சமூக அமைப்பு ஒன்றில் தான் உழைக்கும் மக்களுக்கு உயிரினும் மேலான சுதந்திரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து (அதை அமைக்க அரசியல், தத்துவம், பொருளாதாரம் ஆகிய) மூன்று வழிகளிலும் ஒற்றுடையடன் போராடுவதற்கு எழுந்து வாருங்கள்)
- இராமியா