நன்றி கூறி வாழ்த்துகிறோம்!
தப்பு நடக்க விடமாட்டோம்
தட்டிக் கேட்போம் நாமென்று
தொப்புள் கொடியுற வொன்றாகத்
தொடுத்திருக் கின்ற போராட்டம்
இப்பார் முழுதும் பரவிடநாம்
இணைந்து நின்று குரல்தருவோம்!
இப்போர் வென்று நீதிபெற
எங்கள் பங்கை மறப்போமா???
வல்லர சுகளின் போட்டிக்குள்
வகையாய் மாட்டிக் கொண்டின்று
அல்லற் படுமோர் இனமாக
ஆனது ஈழத் தமிழரினம்…?
கொல்லன் பட்டறை இரும்பாகக்
கொதிக்கும் எமக்கு ஆறுதலைச்
சொல்லி நிற்கும் உறவுகளே!
சூழ்ந்து நன்றி கூறுகிறோம்!
ஈழ மண்ணிற் தமிழரினம்
இன்ன லின்றி உரிமையுடன்
வாழ வேண்டு மெனத்தங்கள்
வாழ்வைத் தந்து போராடும்
தோழர் கூட்டம் பலம்பெறநாம்
துணிந்து புலம்பெயர் நாடுகளில்
ஆழ மான உணர்வோடு
அணிசேர்ந் தொன்றாய்க் குரல்தருவோம்!!
பொன்றி நீதி இவ்வுலகாற்
போன தென்று கூறாமல்
நின்று போரிடும் அனைவர்க்கும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
ஒன்றாய் நின்று போராடி
உலகின் கண்ணைத் திறந்திடுவோம்!!
நன்றி கூறி வாழ்த்துகிறோம்!
நமக்காய் போரிடு முறவுகளே!!
ஒன்று படுங்கள் உறவுகளே!
ஒன்று படுங்கள் உணர்வோடு!!
கொன்று குவித்த கொடியவனின்
கொடுமைக் கெதிராய் நீதியினை
வென்றே தீர்வோம் சேருங்கள்!
வீதிக் கிறங்கி வாருங்கள்!!
என்றும் நீதி சாகாது
என்பதை உணர்த்த அணிசேர்வோம்!
பாதிப் புற்ற தமிழர்நாம்
பகடைக் காயாய் ஆனோமே
நாதி யற்றுப் போனோமா?
நமக்கேன் இந்த நிலையென்று
வீதி தோறும் நின்றழுதோம்
விடிவு தேடி வருகின்ற
சேதி நாடி வரும்போது
சேர்ந்து போரிட வேண்டாமா?
கொத்துக் கொத்தாய் நாமன்று
கொன்று குவிக்கப் படும்போது
மெத்தன மாக இருந்தவரும்
மெதுவாய்க் கண்ணை விழித்தின்று
சித்தம் தெளிந்து நீதிக்காய்ச்
சேர்ந்து குரல்தரும் வேளையிலே
சத்த மின்றி நாமிருக்கத்
தமிழுணர் வில்லா இனமாநாம்?
கொட்டும் பனியில் கடுங்குளிரில்
கூடி நின்று குரல்கொடுத்தும்
எட்ட வில்லை உலகிற்கு
ஏதும் நடக்க வில்லையென
ஒட்டு மொத்த மாய்நாங்கள்
உள்ளம் குமுறி இருந்தோமே!
எட்டுத் திக்கும் குரல்கொடுக்க
எப்படி நாங்கள் பொறுத்திருப்போம்???
கொதிக்கும் உலையை மூடாதீர்!
குமுறும் எம்மை அடக்காதீர்!!
சதிக்குள் எங்களை வீழ்த்தாதீர்!
மதிக்கும் நீதியை மறுக்காதீர்!
தமிழர் உரிமையை நசுக்காதீர்!!
மனித உணர்வைச் சிதைக்காதீர்!!
உதிக்கும் விடியலைத் தடுக்காதீர்!
உண்மை நேர்மையைப் புதைக்காதீர்!!
உலக நீதியை நிலைநாட்டும்
ஒவ்வொரு வரையும் கேட்கின்றோம்!
நிலவும் கொடுமைகள் வேரறவும்,
நீதி உயிருடன் வாழ்ந்திடவும்,
உலகில் ஒடுக்கப் பட்டவர்கள்
மலரும் தமிழீ ழத்திற்கு
மனதாய் ஆதர வளியுங்கள்!!

- அருள்மணி, கனடா