அயர்ந்து உறங்கும் சாமப்பொழுதில்
குழந்தையழும் சத்தம் கேட்டு
படபடவென எழுகிறேன்.
மாடாவிலிருக்கும் சிமிலி விளக்கின் வெளிச்சத்தில்
தொட்டிலில் கிடக்கும் பிள்ளையைத் தூக்கி
என் மார்போடணைத்து பாலூட்டுகிறேன்
பசியாறிய குழந்தை தூங்காது உங்கு மொழி பேசி
எனை விளையாட அழைக்கிறது
நானும் குழந்தையோடு பேசி சிரிக்க
விளக்கின் வெளிச்சமும் எங்களின் சத்தமும்
உன் தூக்கத்தை கலைப்பதாய் வசைபாடுகிறாய்
பதிலேதும் பேசாது தாலாட்டு பாடி
உறங்க வைத்து நகர்கிறேன் என் படுக்கையை நோக்கி
நகர்ந்த சில நிமிடங்களிலே
அதே அழுகையோடு தட்டியெழுப்புகிறதெனை குழந்தை
இது ஒரு முறையல்ல
இது போல் பலமுறையழைத்தாலும் சோர்வடையாது
பாலூட்டுவதும் துணி மாற்றுவதும் உங்கு பேசுவதுமென
இரவுப் பொழுது நகரும்
நேரம் காலம் பார்க்காமல் கவனமாய்
பிள்ளையை பராமரிக்க வேண்டியது
எனக்கேயுரிய வேலையென நினைத்து
இயல்பாய் எப்போதும் நீ துயில் கொண்டிருப்பாய்
எந்த சுக துக்கத்திலும் உள்நுழையாத நீ
பிள்ளையின் தகப்பனெனச் சொல்லிக்கொள்வதில் மட்டும்
தயங்காது முன்னுரிமை பெறுகிறாய்
வெட்கத்தைத் தொலைத்தவர்கள் போலும்
கேள்விகளோடு கொல்லைக்குச் செல்கிறேன்
பிள்ளையின் பீய்த்துணிகளை கசக்க……………
- வழக்கறிஞர் நீதிமலர்