கீற்றில் தேட...

நகர்ந்து செல்லும்
பெருநகரின் வாயிலாய்
சிறு வனாந்திரங்களை
காவு வாங்கிச் செல்லும்
சிறுநகரின் ஒற்றைக் கிளையில் நின்று
நித்தமும் ஓலமிடுகிறது சாக்குருவி.

சாக்குருவி கத்தினால்
சனத்துக்கு ஆகாதென
நகர் நுழைபவரெல்லாம்
கிட்டியதை எறிந்து விரட்டுகின்றனர்.

தன்னை தீண்டும்
மிரட்டலுக்கும், அதிகாரத்திற்கும்
தீய்ந்து போகாத தீவிரத்தோடு
கிழமை தவறாது
ஓலமிட்டு ஓய்கிறது சாக்குருவி
முளைக்க வைக்கும் கல் மரத்தால்
தன் இனத்தின் உறைவிடமும்
இயற்கையின் வனப்பும்
மழையின் வருகையும்
மண்ணின் வாசமும்
மறுதலிக்கப்படுவதை
மன்னிக்க முடியாத பெருங்கோபத்தில்!