எந்த குறிப்புகளுமில்லாமல் தற்கொலை
செய்துக்கொண்டவனுக்கு
இன்னும் பெயர் சூட்டப்படவேயில்லை
தற்கொலை செய்வதற்கு பெயர் கட்டாயம் கிடையாது ஆனால்
பெயரில்லாமல் இந்த தேசத்தில் வாழ்ந்தது மாபெரும் குற்றம்
குறிப்புகளில்லாததால் அவன் எந்த மொழியைச்
சேர்ந்தவனென்று தெரியவில்லை வாழும் போது அவன்
யாராகயிருந்தான் அவனுடைய மதம் என்ன
அவனுடைய கடவுள் யார்
அவன் எந்த சாதி
எதிலும் சேராத ஒருவன் யாராகயிருக்க முடியும்
வாழ் நாளில் கண்ட பேய்களையும் பிசாசுகளையும்
என்ன செய்தான் கொன்று விட்டானா
கொல்வதற்கு அவனுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்
வீடற்றிருக்கலாம் பெயரற்று எப்படி இருக்க முடியும்
அவன் பெயரை எங்கே ஒளித்து வைத்திருந்தான்
பெயரற்ற அவனை யார் காதலித்திருப்பார்கள்
அவன் சாவதற்கு நிறைய காரணங்கள் இருந்திருக்கின்றன
அவன் சாவதற்கு சில வருடங்கள் முன்பு
பசியோடு இருந்திருக்கின்றான்
பசி அவனுடனே ஒரு நாய்க் குட்டி போல இருந்திருக்கிறது
இந்த கவிதைக்கு பொருந்தாத சில வரிகள் இருப்பதைப்போல
அவனுக்குள் அவன் உடலுக்குள் பொருந்தாத
துயரங்கள் இருந்திருக்கின்றன
துயரங்கள் இறைவனின் பிரசாதங்கள் என்று
எங்கேயோ கேட்ட வரியை
வெகு காலம் வயிற்றுக்குள்ளே வைத்திருந்தான்
அதற்கு பிறகு அவனுக்கு நிறைய பிரசாதங்கள் கிடைத்தன
வழிப்போக்கன் ஒருவன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் தூரமென்னவென்று கேட்டிருக்கின்றான்
அவன் பசிக்கும் சோற்றுக்கும் உள்ள தூரம்தானென்றிருக்கின்றான்
இதெல்லாம் அவன் சட்டைப் பகுதியில் இருந்த தகவல்கள்
சட்டை என்பது அவனுடைய தோல்தான்
அவனுடைய எலும்புகளிடம் அவன் ஏன் பெயர் சூட்டிக்கொள்ளவில்லை
என்று யாரோ கேட்டுக்கொண்டிருந்தனர்
அவன் பெயரற்று வாழ்ந்தது குற்றமே
அவன் இந்த தேசத்தை மட்டுமல்ல
ஒரு மதத்தை ஒரு சாதியை
ஒரு கடவுளை ஏமாற்றியிருக்கின்றான்
எத்தனை பெரிய குற்றம்
எல்லா குற்றத்திற்கும் அவனுக்கு மரணத்தண்டனை
தீர்ப்பளிக்கப் படுகிறது
தற்கொலை செய்தவனின் கழுத்தில் கயிற்றை இறுக்குங்கள்
இந்த வரிக்கு பிறகு மீதமிருந்தவை மூன்று மட்டுமே
தூக்கு கயிறு
கறுப்புத்துணி
ஏற்கனவே இறந்த ஒரு பிணம்
கீற்றில் தேட...
பெயரற்றவனின் தற்கொலை
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்