சாதியின் கைகளில் சமூகவெளி பரப்பி
சமத்துவத் தூண்களை வெளிப்படையாய் வெட்டியெறிந்து
அநீதிகளை உயிரெனக் கொள்ளும் மனிதர்களை
உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்

சாதி மறுத்த நியாயங்களை யாரும்
இப்போதும் பேசுவதில்லை
சாதி மறுத்த மனிதர்களை யாரும்
எப்போதும் ஏற்றுக்கொள்வதில்லை

மனிதனை மனிதனாய் மதிக்க
தேவையாயிருக்கிறது சாதி அடையாளம்
உணவை உறவாய் பகிர்ந்துகொள்ள
தேவையாயிருக்கிறது சாதி அடையாளம்
வாழ்கிற வெளிக்கும் செய்கிற வேலைக்கும் கூட

சாதிவேர்களில் மனிதர்களை முன்னிறுத்தி
உயர்வு, தாழ்வு படிநிலைக்கிரையாக்கி
தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக
உயர்த்திக்கிட்டவர்கள் உயர்த்திக்கிட்டவர்களாக வாழ்வதென
முடிவு சொல்லிப் போகிறார்கள்

மறுப்பவர்களையும் தகர்த்தெறிபவர்களையும் 
அடையாளமற்ற முறையில் அழித்தொழிக்க முனைகிறார்கள்
சம்மதித்துப் போகிறவர்களையும் சமாதானம் செய்கிறவர்களையும்
தீண்டத்தகாதவர்களாக்கி கொத்தடிமைகளாய் மாற்றிக் கொண்டிக்கிறார்கள்

சாதி படுகொலையும் தீண்டாமைப் பாகுபாடுமே 
சாதியின் இருப்பெனப் புகுத்தி
தனதிருப்பை தக்கவைத்துக் கொள்கிறார்கள்
சாதி வழியே பிறந்த ஊர்க்கொளுத்திகள்

மனிதர்களை மட்டுமா வதைக்கிறார்கள்
சட்டத்தின் வழியே நிலைநிறுத்திப் போன
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் அனைத்தையும்
சாதியின் வழியே இல்லா நிலையாக்கி விட்டார்கள்
செல்லா நிலையும் கூட

இருண்ட தேசத்தில் வறண்டு கிடக்கிறது
வாழ்வாதார உரிமைகள்
மீண்டுமொரு சுதந்திரப்போர் மூண்டெழக் காத்திருக்கிறது
சேரியின் கைகளில்
சாதிக்கெதிரான போராட்டமாக

வஞ்சிக்கப்பட்டவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும்
முகிழ்த்தெழுந்து ஒருமித்த குரலெழுப்பும் போது
வெடித்துச் சிதறும்  சமத்துவப் பொதுவெளியாய்…

- வழக்கறிஞர் நீதிமலர்