பொருளா தார அடியாள் வரவில்
மெருகிப் பூசிய தளையை ஏற்பதும்
கள்ளத் தனத்தை ஏற்க மறுப்போர்
குள்ள நரிகளால் மாய்ந்து போவதும்
அதிலும் தப்பும் உயர்ந்தோர் இருப்பின்
விதிகளை மதியாது போரிட் டழிப்பதும்
பெருமுத லாளிய வழியே என்பதால்
நெருடலில் தவிக்கும் வளரும் நாடுகள்
வியட்நாம் போரை நினைத்துப் பார்த்தால்
கயமையை எதிர்க்கும் துணிவு பிறக்கும்
(பொருளாதார அடியாட்களின் வரவில் (சொல்லடுக்குகளினால்) மெருகிப் பூசப்பட்ட (அடிமைத்) தளையை ஏற்பதும், அப்படிப்பட்ட கள்ளத்தனத்தை ஏற்க மறுப்பவர்கள் (ஆயுதங்கள் தாங்கிய) குள்ள நரிகளால் கொல்லப்படுவதும், அதிலும் தப்பும் உயர்ந்தோர்கள் இருந்தால், அவர்கள் ஆளும் நாடுகள் மீது (சர்வ தேச) விதிகளை மதியாது போரைத் தொடுத்து அழிப்பதும், ஏகாதிபத்தியத்தின் வழியாக இருப்பதால், செய்வது அறியாமல் வளரும் நாடுகள் திகைத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் (வீரஞ்செறிந்த) வியட்நாம் போரை மனதில் நினைத்துக் கொண்டால் (பெருமுதலாளிகளின்) கயமையை எதிர்க்கும் துணிவு பிறக்கும்)
- இராமியா