கீற்றில் தேட...

முச்சந்தியில் கிடக்கிறது
ஒரு சாவிகொத்து!

எடுத்துப் பார்த்தால்
மண்ணில்
மறைந்திருந்த பாதியும் தெரிகிறது!

எந்தப் பூட்டுகளின்
சாவிகளோ
இவைகள்?

உடைந்த பூட்டுகளின்
அவலமெல்லாம்
சாவி தொலைவதால்தானோ?

தொலைத்து விட்டு
வந்த வழியிலேயே
தொலைந்ததை
தேடி வருகிற தவிப்பை
அறிந்தவனல்ல
அனுபவித்தவன்.

பல அறைகளைக் கொண்ட
பெரிய வீட்டின் சாவிகளாய் இருக்கலாம்

பெரிய அலுவலகத்தின் சாவிகளாய் இருக்கலாம்
அவனை விட்டு
இந்தச் சாவிகள் நழுவி விழும் தருணம்
அவனது நினைவுகள் என்னவாயிருந்திருக்கும்?

இனி  என்ன செய்ய...

பக்கத்திலுள்ள தேநீர்க்காரரிடம்
கொடுத்தால்
தவிப்போடு தேடி வருபவனிடம்
கொடுத்துவிடுவாரா?  

அல்லது
எடுத்த இடத்திலேயே
இட்டுச்சென்றால்
அவன் கையில்  கிட்டுமா?

அவனிடம் இந்தச் சாவிக்கொத்தை
எப்படிக் கொண்டு சேர்ப்பதென்று
யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்
இந்த முச்சந்தியிலே!

- கத்தாழை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)