தக்காளிச் செடியும்
கற்றாழைச் செடியும்
ஒரு மாஞ்செடியும்
சில கீரைகளும்
போட்டிருந்த
எங்கள் வீட்டின் பின்பக்கம்
இன்று சிமெண்ட்டால் பூசப்பட்ட தரையாகியிருக்கும்
சொந்த வீட்டை விற்று
வேரூருக்கு புலம்பெயர்வதொன்றும்
சாதாரண துயரில்லை.
வீட்டின் எந்த நினைவுகளும்
அழித்தெடுக்க முடியாத
ஆழத்தில் புதைந்திருக்கும்
வாடகை வீட்டின் துயரம்
ஒருபுறம் வாட்டியெடுக்க
சொந்த வீட்டை விற்ற துயரம்
மறுபுறம் பாடாய்படுத்தும்
எப்போதும் திரும்பமுடியாத
ஒருகாலத்தில் சொந்தமாயிருந்த
அந்த வீட்டிற்குள்
அடிக்கடி சென்று
எட்டிப்பார்க்கிறது மென்மனது
எல்லோருக்குமான துயரங்களில்
ஒன்றானதாகவே அது இருந்த போதும்
எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத
துயர் கவ்வுகிறது
இருந்தபோதும் ஒருவாறு தேற்றிக் கொள்ள
இப்போது கைகொடுப்பது
வீட்டைப் பற்றி எழுதுவது மட்டுமே
கீற்றில் தேட...
வீட்டின் துயரம்
- விவரங்கள்
- இவள் பாரதி
- பிரிவு: கவிதைகள்