கீற்றில் தேட...

உன்னோடு பேசிக்கொள்ள எனக்கான
இறுதி வாய்ப்பு இந்த எழுத்துக்கள் மட்டுமே

மிகச்சுருக்கமாய் எப்போதும் நான்
உன்னோடு பேசியதில்லை
நான் நினைக்கிறதையெல்லாம் கிடைக்கிற நேரத்தில்
அழகான வார்த்தைகளோடும் தெளிவான உச்சரிப்புகளோடும்
உடல் மொழி சரிய கொட்டிவிட்டுச் செல்வேன்

எழுத நினைக்கும் இத்தருணத்தில்
என்னிடத்தில் வார்த்தைகளேயில்லை
எதை எழுதுவதென்றும் எனக்குத் தெரியவில்லை
என் முகத்தில் சிரிப்புமில்லை அழுகையுமில்லை
எப்போதும் கேட்கிற கேள்விகள் கூட இல்லை

குரல்வளையை
மௌனங்கள் புடைசூழ சலனமற்று
எழுத்துக்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்

இன்னும்கூட சிக்கிடவில்லை

மனதை
பழைய இரவுகளைத் தேடித்தேடி மண்டியிட்டுக் கெஞ்சுகிறேன்
கடந்து வந்த பாதையை கால்வலிக்க தேடிச் செல்கிறேன்
நமதறையின் போர்வைக்குள் போத்திக் கொண்டு
அழுது புலம்புகிறேன்
கைகோர்த்து கதையளந்த ரேகைகளைக்கூட விசாரித்துவிட்டேன்
என்னிடத்தில் எந்த வார்த்தைகளும் மண்டியிடவில்லை
மயங்கிச் சாய்ந்திடவில்லை…
ஏனெனில்
என்னிடத்தில் நீயில்லை…

சேர்த்துவைத்த ஞாபகத்தையெல்லாம் பிரிவெனும் சொல்
மெதுவாய்த் தின்று விழுங்கிக் கொண்டிருக்கிறது…………
தேடித்தேடி உன்னோடு சேகரித்த நினைவுகளையெல்லாம்
பிரிவு உடனுக்குடன் வெட்டிச் சாய்த்துவிட்டது……………

வெற்றுடம்பில் உயிரைச் சுமந்து
பிணமாய் வீற்றிருக்கும் என்னைத் தேற்றுவதற்கோ
ஆறுதல் சொல்வதற்கோ நீயில்லை
நீயில்லா என்னில் எப்படியிருக்கும்
உன்னைப் பற்றிய வார்த்தைகள்…!!

- வழக்கறிஞர் நீதிமலர்