கீற்றில் தேட...

குளியலறைக் கண்ணாடியில்
அவ்வப்போது தோன்றி ஏய்க்கிறது
உனது சிரித்த முகம்

அறை முழுதும் அரைகுறை ஆடையுடன்
நீ நடக்கும் கோலம் என்னில் வந்து போகிறது
அவ்வப்போது

மனதைச் சுடுகின்றன
புகைத் தட்டியின் சாம்பலில்
அழுத்தமாய்ப் பதித்திருக்கும்
உனது குட்டி விரல்கள்

எஞ்சியிருக்கும் உனது அட்டை பொட்டுகள்
அடிக்கடி கொடுக்கும் நெற்றி முத்தத்தை
நினைவுபடுத்துகின்றன

அலமாரியில் நிரம்பியிருக்கும்
உனது புடவையின் வாசம்
திறக்கையில் எல்லாம்
நெஞ்சடைக்கச் செய்கிறது என்னை

வீடெங்கும் உன்னைத் தேடி அலைந்த
நம் வீட்டுப் பூனைகள் உனக்காக
கட்டிலில் வந்து காத்திருக்கின்றன

அப்படியே விட்டுச் செல்கிறேன்
என் கழுத்தைச் சுற்றிலும்
கத்தியாக நிற்கும்
நாம் வாழ்ந்த தடயங்களை

உயிரை விடுவதில்
எனக்கும் உடன்பாடில்லை
உன்னைப் போல

எனக்காக காத்திருக்கின்றன
இந்த உலகத்தின்
ஏராளமான தெருக்கள்...

- அருண் காந்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)