மார்க்சும் லெனினும் காட்டிய வழியில்
ஆர்ப்பரித் துழைப்பவர் எழுந்திடா வண்ணம்
பலப்பல பேதங்கள் அவர்களுள் விதைத்தும்
நலமில வற்றையும் நலமெனக் காட்டும்
ஊடகம் தன்னில் மக்களை அழுத்தியும்
வெற்றி அடைந்ததாய் நினைத்திடும் முதலியே
உந்தன் வழியில் புவிவெப்ப உயர்வு
உலகை உறுதியாய் அழித்திட முயல்கையில்
சமதர்மம் மட்டுமே அழிவைத் தடுக்கும்
என்பதால் வென்றதாய் எண்ணிட வேண்டாம்

(உழைக்கும் மக்கள், கார்ல் மார்க்சும் லெனினும் காட்டிய வழியில் பொங்கி எழாதபடி, அவர்களுள் பலவிதமான பிரிவினைகளை விதைத்தும், நல்லவை அல்லாதவற்றையும் ஊடகங்களில் நல்லவையாகக் காட்டி மக்களை (சிந்திக்கவிடாமல்) அழுத்தியும் (பொதுவுடைமைத் தத்துவத்தை) வெற்றி கொண்டு விட்டதாக நினைக்கும் முதலாளி வர்க்கமே! (சந்தை விதிகளின்படி இயங்கும்) உன் வழியில் உருவாகி உள்ள புவி வெப்ப உயர்வு, உலகை நிச்சயமாக அழித்து விடும் பாதையில் கொண்டு செல்ல முயன்று கொண்டு இருக்கையில், (சந்தைப் பொருளாதாரம் கட்டாயப்படுத்தும் புவி வெப்ப உயர்வுப் பொருட்களின் உற்பத்தியைத் தடுக்கவும், புவி வெப்பத்தைக் குறைக்கப் பெரும் அளவில் விவசாயம் மற்றும் மரம் வளர்த்தலை முன்னெடுக்க விடாமல் தடை செய்யும் சந்தைப் பொருளாதார முறைக்கு எதிராக அவற்றை வளர்த்து எடுக்கவும், அதன் மூலம் இவ்வுலகைப் புவி வெப்ப உயர்வில் இருந்து காப்பதற்கு வழி வகுக்கும்) சமதர்மம் மட்டுமே அழிவைத் தடுக்கும் என்பதால் பொதுவுடைமைத் தத்துவத்தை வென்று விட்டதாக நினைக்க வேண்டாம்.) 

- இராமியா