உறுதியான முடிவென
அடித்துச் சொல்கிறாய்
அன்று போல் இன்றும்
உன்னை திருமணம் செய்யாவிட்டால்
தற்கொலை செய்வேனென
அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்தாய்
எத்தனையோ முறை மறுதலித்தும்
உன் முடிவில் மாற்றமில்லையெனக் கூறினாய்
உன் நம்பிக்கையை நடவுசெய்ய துணிந்து
எதிர்ப்புகளைக் கடந்து கரம்பிடித்தேன்
எத்தடைகள் வந்தாலும்
பிரியவே கூடாதென முடிந்த வரை
உன்னோடு சமரசம் செய்து வாழ
பழக்கப்படுத்திக் கொண்டது மனது
நமக்கான பயணத்தில் அழகியலோ பொருளியலோ
முரண்பாடாய் மோதிக் கொள்ளவில்லை
இரத்தவெறி கொண்ட சாதியாதிக்கம்
விடாப்பிடியாய் என்னிலிருந்து
விலகிச் செல்ல மெதுமெதுவாய்
தரவு சொல்லி அழைத்துப் போனது உன்னை
அன்று காதலை வெல்ல சாதியை உடைத்தெறிந்தாய்
இன்று சாதியை வெல்ல காதலையே
உடைத்தெறிகிறாய்
எதற்காக என்னுள் நுழைந்தாய்
எதற்காக என்னிலிருந்து பிரிந்து செல்கிறாயென
தெரியவில்லை எனக்கு
நானும் உறுதியாய் பதிவுசெய்து போகிறேன்
சாதியை உடைக்க உன் கரம்பிடித்த நான்
சாதியை தகர்க்கும் வரை கொடுக்கப் போவதில்லை
உனக்கு
விவாகரத்து எனும் விடை
- வழக்கறிஞர் நீதிமலர்