என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்கிறீர்கள்.
ஒன்றும் சொல்லாமல் புன்னகையுடன் கடக்கவியலாதவனாகிறேன்.
என்ன செய்கிறேன் என்கிற கேள்விக்கு என்ன செய்து என் செலவுகளை சந்தித்துக்
கொள்கிறேன் என்ற அர்த்தமாகிறது.
என்ன செய்து என் குடும்பத்தை ஓட்டுகிறேன் என்று அர்த்தமாகிறது.
என்ன செய்து என் கேளிக்கைகளை பூர்த்தி செய்துகொள்கிறேன் என்று அர்த்தமாகிறது.
என்ன செய்து என் ஆசைகளை நிறைவேற்றுகிறேன் என்று அர்த்தமாகிறது.
என்ன செய்து என் எதிர்பாராமைகளைக் கடக்கிறேன் என்று அர்த்தமாகிறது.
என் கைகள் குவிந்து யாசிக்கிறேனா என்று உங்களுக்கு சந்தேகமிருக்கின்றது.
நான் யாரிடம் எங்கே மறைந்து என்னை மறைத்துக்கொண்டு யாசிக்கிறேன் என்று
தெரிந்துகொள்வதில் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள்.
நான் வெறுமனே கைகுவிக்கிறேனா?அல்லாது கால்பற்றிக் கதறுகிறேனா என்று
அறிந்துகொள்வதில் நீங்கள் வெகுமுனைப்பாக இருக்கிறீர்கள்.
என்ன வார்த்தைகளை என்ன காரணங்களை நான் முன் நிறுத்தி யாசிக்கிறேன் என்பதை
தெரிந்துகொள்ள நீங்கள் மிகவும் தலைப்படுகிறீர்கள்.
குறிப்பிட்ட சிலரிடம் தொடர்ந்து யாசிக்கிறேனா அல்லது எல்லோரிடமும்
யாசிக்கிறேனா எனத் தெரிந்து கொள்வது நலம் என்று இருக்கிறீர்கள்.
அன்னியப் புதிய இடம் ஒன்றில் நான் யாசிக்கச் செல்வதாக நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.
நான் ஒரு திருடன் என்று உங்கள் உள்மனம் சொல்கிறது.
பகல்களிலெல்லாம் சும்மா இருந்துவிட்டு இரவுகளில் நான் திருடச் செல்கிறேனோ
என்று ஐயம் உமது.,
பேசிக்கொண்டே இருந்துவிட்டு சட்டென்று பொருள்மறைக்கும்
ஜாலவித்தைக்காரன் நான் என்று எண்ணுகிறீர்கள்.
நான் உபயோகப்படுத்துகிற புதிய பொருட்கள், எனது புத்தாடைகள் இன்னபிறவற்றை
எங்கேயிருந்தாவது களவாடியிருப்பேன் என்று நம்புகிறீர்கள்.
என் கால்சராய்ப் பையிலிருந்து சில்லறைக்காசுகளோடு வந்துவிட்ட சில
பணத்தாட்களை மோப்பம் பிடித்து அவற்றின் பூர்வகதையை
அறிந்துவிடும் ஆவலாதி உம்முடையது.
எப்போதெல்லாம் புத்தகக் கடைகளில் என்னைச் சந்திக்கிறீர்களோ அப்போதெல்லாம்
உங்களது புன்னகை என் களவறிந்த வெற்றிச்சிரிப்பைப் போன்றது.
அவ்வப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் எனக் கேட்கிறீர்கள்.
பதிலாய் நான் சொல்கிறவற்றின் முரண்களைத் தொகுத்து
எள்ளிச்சிரிக்க உங்களால் இயலுகிறது.
நீங்கள் எனது நண்பர்
அதை நிரூபிக்கிறதற்காக தேநீர்க் கடைகளில் ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்துவிட்டு
என்னைப் பணம் தரவிடாமல் நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
அவ்வப்பொழுதுகளில்.
அந்த ஒரு குவளைத் தேநீர்த்திரவத்திற்கு
நீங்கள் விரும்புகிற உண்மைகளையெல்லாம்
வெளிக்கொணர்ந்துவிடும் சக்தி இருப்பதாக
எப்போதும் நம்பிக்கொண்டிருங்கள்.