நான் ஊர் திரும்பும்போதெல்லாம்
அந்த ஆலமரம் தான்
என்னை களிப்பூட்டும்
பால பருவத்தில்
ஊஞ்சலாடியதும்
மரத்தில் மறைந்து
கண்ணாமூச்சி ஆடியதும்
அதைப் பார்க்கும்போதெல்லாம்
என் நினைவில் வரும்
திருவிழாவின் போது
ஆலமரத்தடி தான்
நாடக மேடை
அப்பாவும் நானும்
நடுஇரவு வரை
நாடகம் பார்த்தது
இன்றும் நினைவிருக்கிறது
இன்று நண்பர்களெல்லாம்
பிரிந்தாலும்
அன்று அவர்களுடன்
கதை பேசி சிரித்து
மணல் வீடு கட்டி
விளையாடி களித்த
அந்த ஆலமரம் தான்
எனக்கு இன்று
நினைவுச்சின்னம்
இந்த முறை
விடுமுறைக்கு
சென்றபோது தான் தெரிந்தது
ஆலமரம் வெட்டப்பட்டது
மனதின் நினைவு
நரம்புகளையெல்லாம்
வெட்டியது போன்று
சோகம் கனத்தது
உணர்ச்சிகள் அற்றுப் போய்
இயற்கையை விடுத்து
இயந்திரத்தை ஆளும்
இவர்கள் இப்படித்தான்
தொட்டியில் மணல் வைத்து
குரோட்டன் வளர்ப்பவர்களுக்கு
ஆலமரம் அனாவசியம் தான்