மது
நிம்மதியற்றவர்களின்
பெருந்தூக்கம்..!
கடவுளால் கைவிடப்பட்டவர்களுக்கு
சாத்தானின் பரிசளிப்பு..!
தன் குருதியைக் குடிக்கும்
முதலாளிகளுக்கு..
தானே முன்வந்து தருகிற
இரத்த தானம்..!
கண்ணீரை
போதையாக மாற்றி விடும்
புதுமைகளின் இரசவாதம்..!
தாலியை உருகச் செய்யும்
தந்திரம்..!
ஆண்மையின்
காலாவதியாகிப் போன
கம்பீரம்..!
பெண்கள்
குடிக்கும்போது மட்டும்
மதுக்குடுவையில்
பனிக்கட்டியாய் கரைகின்றன
மதங்களும் போதனைகளும்..!
கடவுளை
ஒரு கரப்பான் பூச்சியைப் போல
அருவெறுப்பாக பார்க்கிறார்கள்
குடிகாரர்கள்..!
குடித்து முடித்ததும்
காலியாகிப் போன
மதுக்கோப்பையைப் போல
காத்திருக்கிறது
மிச்சமிருக்கும் வாழ்க்கை..!
- அமீர் அப்பாஸ்