கீற்றில் தேட...

ஆழ்துயில் ஆட்கொண்ட
பின்னிரவில் வந்த
பேயொன்று
தன்னைச் சாதியென்று
அழைத்துக்கொண்டது
இட்டபணி செய்ய
ஏவலாள் தேவையென்று
நியமன ஓலை நீட்டியது
கொலை தொழிலென்றும்
பகைமையும், பேதமையும்
ஊதியமேன்றும் வாக்களித்தது
பசியாறத் தசைகளும்
தாகம் தீர்க்கக் குருதியும்
இடைவேளைகளில்
தருவதாய் உறுதியளித்தது
வாழ்நாள் அடிமை சாசனத்தை
வைப்புநிதியாய்க்  கேட்டது
தூக்கம் கலைந்தெழுந்து
செபிக்கத் தொடங்கினேன்
பேயோட்டும் மந்திரத்தை
சாதியற!சாதியற!சாதியற!

- அதீதன்