என் மேசைமீது அமர்ந்திருந்த புத்தனுக்கு
வயது இருபத்தைந்து இருக்கும்.
அவன் எப்போதும் கண்மூடியபடி
ஆழ்ந்த நித்திரையில்தான் நேரத்தைக் கழிப்பான்.
எப்போதாவது
இதழ்களில் மெல்லியதாய்
புன்னகை தவழ்ந்தோடும்.
அப்போதும் கண்மூடியபடிதான் இருப்பான்.
இரண்டு மூன்று நாட்களாய்
திடீரென்று சப்தமிட்டுச் சிரிப்பதும்
கண்ணீர் பொங்க அழுவதுவாய்
அவனது நடவடிக்கைகள்
திகைப்புறச் செய்கின்றன.
அவனது தேவை என்ன
அழுகைக்கும் சிரிப்புக்கும் காரணம்
என்னவாக இருக்கும் என்று
யோசித்தபடியே
உறங்கச் சென்றேன்.
மெல்ல என்னருகில் வந்து அமர்ந்தவன்
யசோதையின் ஞாபகமாய் இருக்கிறதென்றும்
யசோதையின் சிலையையோ
ஓவியத்தையோ
அருகில் வைக்கும்படியும் காதோரமாய் கிசுகிசுத்தான்.
யசோதையின் சிலைக்கு நான் எங்கு செல்வேன்
யசோதையின் உருவத்தை
இதுவரை பார்த்ததே இல்லையே என
யோசனை செய்துகொண்டிருந்தபோது
‘அது உன் பாடு
எனக்கு யசோதை வேண்டும்’என்று
சொல்லிக் கொண்டே என்னருகிலிருந்து நகர்ந்து
மேசையின்மீது அமர்ந்து கொண்டு
நித்திரை கொள்ளத் தொடங்கினான்.
மறுநாள் வெளிக்கிளம்பும்போது
‘யசோதையின் சிலைக்காகக் காத்திருக்கிறேன்
நிச்சயம்
நீ கொண்டு வருவாய் என்ற
நம்பிக்கை இருக்கிறது’ என்று சொல்லி
காதல் ததும்பப் புன்னகைத்து விட்டு
கண்மூடி நித்திரையில் ஆழ்ந்தான்
புத்தன்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
புத்தனின் காதல்
- விவரங்கள்
- மனுஷி
- பிரிவு: கவிதைகள்