மழையே!
வானிலிருந்து
தனித் தனியாய்த்
துளித் துளியாய்
மண்ணில் பிறந்தீர்!
விழுந்த நொடியே
மண்ணின் நிறம் கொண்டு
தன்னுடன் பிறந்தாரோடு
இரண்டறக் கலந்தீர்!
இல்லையினி தானொரு
தனியாளென்று
அருவியாய் உருக்கொண்டு
ஆற்றலின் பெரும்படையாய்
ஆறாய்ப் பெருக்கெடுத்துக்
களம் நோக்கி நடைபோடும்
இயற்கையின் படைப்பே! மழையே!
என் தமிழினத்தைப் பார்த்தாயா?
மதங்களாகச் சாதிகளாகப்
பிரிந்து சிதறிக் கிடக்கின்றார்!
ஒரே வயிற்றில் பிறந்த
இரட்டை யரானாலும்
அரசியல், பதவி, பணப்
பேராசையில் பிரிந்து
பகைவனுடன் சேர்ந்து
போட்டி பொறாமையில்
வெட்டுண்டு சாகின்றார்!
தன் உறவை மாற்றான்
கொன்றொழிக்கும் போதும்
தங்கையரின் கற்பைச்
சூறையாடியபோதும்
பகைவனின் காலை
வணங்குகின்றான் அந்தோ!
மழையே!
எந்தமிழர்மேல் சற்று
இறக்கம் கொள்வாயா?
உங்கள் ஒற்றுமையைத்
தமிழர்க்குக் கற்பிப்பாயா?
அறிவு பிறழ்ந்து
வாழும் இவர்களுக்கு
வாய்நாடி வாய்ப்பச் செய்ய
வேண்டுகிறேன் கனிந்து அருள்வாயே!
- குயில்தாசன்