கீற்றில் தேட...

நியாயமற்று நடுவீதியில்
வெட்டியெறிப்பட்டவனின் உடலிலிருந்து
குபுகுபுவென இரத்தம்
வெளியேறிக் கொண்டிருக்கிறது

கண்கள் இருள நரம்புகள் புடைத்தெழ
மயிரிழையில் உயிர் ஊசலாட
உதவிகேட்டு சைகை செய்கிறது
கைவிரல்கள் மட்டும்

நாதியற்று கிடக்கும் அவனது
உடலிலிருந்து
இன்னும் சற்றுநேரத்தில்
உயிர் பிரிந்து போகலாம்

யாரேனும் நினைத்திருந்தால்
சம்பவம் குறித்து காவல்துறைக்கு
தகவல் கொடுத்திருக்கலாம்

யாரேனும் நினைத்திருந்தால்
முதலுதவிக்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டிருக்கலாம்

யாரேனும் நினைத்திருந்தால்
மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றிருக்கலாம்

குறைந்த பட்சம்
சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்காவது
செய்தி பரப்பியிருக்கலாம்

இவற்றில் எதுவும் நடக்கவில்லை
கூட்டம் கூட்டமாய் நின்று
கூச்சலிட்டவர்கள்
மனிதநேயம் மறந்த
சாதியின் பிரதிநிதிகள்

இழிகுலத்தில் பிறந்தவன்
எத்தகு உயர்பதவியிலிருந்தாலும்
சாதி இந்துப்பெண்ணை காதலித்தால்
இதுதான் தண்டனையென
தண்டோரா போடும் கொலையாளிகள்

கீழ்சாதில பொறந்தவன் எப்படிடா
எங்க பொண்ண விரும்பலாம்?
வெட்டியெறிங்கடாவென சாதி நீதிக்காக
போராடி வரும் சாதி பரப்புரையாளர்கள்
சாதியின் கௌரவத்தை நிலைநாட்ட
உயிரைக் கொடுத்து உயிரைப் பறிப்பவர்கள்

யாரெல்லாம் சாதியை உடைத்தெறிந்து
சாதி மறுப்புத் திருமணம் செய்ய
துணிகிறார்களோ அவர்கள் மீதெல்லாம்
நடத்தப்படும் படுகொலைகள்

மரணித்துக் கொண்டிருக்கிறது
கழுத்தறுத்து கிடத்தப்பட்டவனின்; உயிரல்ல
சட்டமும், ஜனநாயகமும்…

- வழக்கறிஞர் நீதிமலர்