கீற்றில் தேட...

உற்றார் வரும் வழி
நடந்து காட்டிச் சொல்ல காக்கையை
இன்று காணோம்

நள்ளிரவில் ஊளையிட்டு
காலன் வரும் வழி சொல்ல ஞமலியை
இன்று காணோம்

முதிர்ந்த பழத்தை
கூரிய பற்கள் கொண்டு கடித்து வெளிப்புறத்திலிருந்தே
அதன் சுவை காட்ட அணிலை
இன்று காணோம்

மழை வரும் அறிகுறி காட்ட
ஜன்னலின் கம்பிகளை கவ்விப் பிடித்துக்கொண்டு
கிறீச்சிடும் மழைக்குருவிகளை
இன்று காணோம்

வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் சாரையாக ஊர்ந்து
மழையின் வருகையை முன் கூட்டி
அறிவிக்கும் எறும்புகளை
இன்று காணோம்

வரவை எதிர்பார்த்து
வழி மேல் விழிவைத்துக்
காத்துக் கிடந்தபோதும்
உனை
இன்றும் காணோம்.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)