நம் இருவருக்குமான நட்பு
எப்போதிருந்து ஆரம்பமானதென்று
நம் இருவருக்குமே தெரியாது.
பகிந்துண்ட ஒற்றைச் சீனி மிட்டாயின்
உதட்டோரத் தித்திப்புடன்
பூர்த்தியடைந்து விடும்
நம் சிறிய உலக மொத்த தேவைகளும்.
என் வீட்டு கொலுவிற்கு ஏசுபிரானும்
உன் வீட்டு குடிலிற்கு கிருஷ்ணனும்
பல வருடங்கள் தவறாமல் வந்திருக்கிறார்கள்.
பாதித் தூக்கத்தில் பாட்டியின்
கண்காணிப்பில் பாதுகாப்புடன்
வெயிலில் பாதி காய்ந்த கூழ் வடகத்தின் ருசி
நம் இருவருக்கு மட்டும்தான் தெரியும்.
நான் முதல் நாள் பள்ளி செல்லும்போது
நீயும் உடன் வர அழுது அடம் பிடிக்க
என் பள்ளிக்கூடம் வரை வந்து
பெரிய மனுஷியைப் போல
கையசைத்து வழி அனுப்பியதை
நான் எப்படி மறக்கமுடியும்.
பெற்றோர்களின் பணி நிமித்தம்
வாழ்விடமும் மாறிப்போக
நம் பிரிவும் நடந்தேறியிருக்கிறது
மிகவும் வெகு இயல்பாக
மீண்டும் சந்திப்போம் என்ற
பொய்யான வாக்குறுதிகளால்.
கண்களில் நீர் முட்ட
நான் கொடுத்த ஒரு இறுதி முத்தத்தால்
தொலைக்க இருந்த அந்தத் தருணத்தை
பசுமையுடன் என் கைகளில்
அர்ப்பணித்து விடை பெறுகிறாய்
ஒரு குட்டி தேவதையைபோல்.
- பிரேம பிரபா
கீற்றில் தேட...
தேவதைக்கு ஒரு முத்தம்
- விவரங்கள்
- பிரேம பிரபா
- பிரிவு: கவிதைகள்