கீற்றில் தேட...

புதிதாயிருக்கிறது
உனக்கும் எனக்குமான உறவு
வெட்கப்படத் தெரியா எனக்குள்
எப்படி நுழைந்தது
உன்னைப் பற்றிய நினைவும் தீண்டலும்.

பிடிக்காத பக்கங்களில்
பிடித்து வைத்திருந்த உன்னுருவம்
எனக்கேத் தெரியாமல்
எப்போது வாசிக்கப்பட்டது
என் விழிகளால்…

எதற்குள்ளும் வசப்படாத
என்னிதயம் உன்னசைவைக் கண்டதும்
தனிமை தேடி
எங்கெங்கோ பயணித்துப் போகிறது
எனக்கான நகர்வுகளாய்…

படபடப்பாய் சுற்றித்திரியும்
என் நாழிகைக்குள்
மௌனமான சில பகிர்வுகளும்
சலனமான சில எதிர்பார்ப்புகளும்
தயங்கி தயங்கி சாய்ந்து கொள்கிறது
என் தோள் மீது.

கனவு போலிருக்கிறது
என்னையுமறியாது எனக்குள் நுழைந்து
எப்படி என்னை வீழ்த்தினாயோ
இரகசியமாய் நேசித்த உறவில்
நின்று கொண்டு மெதுமெதுவாய்
என்னுள் வாழ்ந்து போகிறாய்
நடுநிசியில் வந்து போகும் ஊடலிலும்,
நடுப்பகலில் வந்து போகும் தேடலிலும்

- வழக்கறிஞர் நீதிமலர்