கீற்றில் தேட...

மக்களுக்காக தயாரிக்கப்படுகின்றன இடைச் செருகல்கள்.
இடைச் செருகல் கொழுத்த காட்டுப் பன்றி போலவோ
மண்ணுக்கடியில் ஈரத்தோடு பேசிக் கொண்டிருக்கும்
மண்புழுவைப் போலவோ இருந்துவிடும்
இடைச்செருகல் தானே வென்று சும்மா இருந்து விட்டால்
நாளை அது நிதர்சனத்தின் நிரந்தர வெளிச்சமாகி
முட்டாளாக்கிவிடும் சரித்திரத்தின் பக்கங்களை
பிறகு திரேத யுகத்தில் பிறந்த
இராமனின் வீட்டைக் கண்டுபிடித்த
நீதிபதிபோலாகிவிடும் நம் நிகழ்காலம் கேலிக்குறியதாய்
இடைச்செருகல்களின் உரிமையாளர்கள் சாதாரணமானவர்களில்லை
அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடியவர்கள்
அதிகாரத்தை நிர்மாணிக்கக் கூடியவர்கள்
அவர்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பவர்கள்
கொலை தற்கொலையாகும் திரைக்கதைகள்
சர்வசாதாரணம் இடைச்செருகலில்
அதிகாரத்தின் இடைச்செருகல்
பிணத்தின் வாயிலிருந்தும் வாக்குமூலம் வாங்கிவிடும்
குறுக்குக் கேள்வி கேட்டால்
இறந்தவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்டது பாவமென்றும்
அதை செய்கிறவர்களுக்கு
தூக்குத்தண்டனை என்றும் அறிவிப்பு வரும்
இடைச்செருகல்கள் ஆகாயத்தின் அசரிரீகளாக்கப்படுகிறது
இடைச்செருகல்களை கண்டுபிடிக்கிறவர்கள்
குறைந்து கொண்டே வருகிறார்கள்
எதிர்காலத்தில் இடைச்செருகல்களே வரலாறாகிவிடும்
எல்லா சாட்சிகளும் கொல்லப்பட்ட பிறகு.