கீற்றில் தேட...

 
kiss_army_man_380அன்புள்ள அம்மா
சுவாசத்திற்காகப் போராடும்
பலவீனமான காற்றில் உதிர்ந்த
வேனிற்காலப் பூக்கள்
விட்டில் பூச்சிகளென
பறப்பதும் பிறகு வீழ்வதுமான
ஒரு போராட்ட கால்த்தில்தான்
அவனை நான் முதன் முதலாக
ஒரு கோப்பைத் தேநீருடன் சந்தித்தேன்.
தற்காலிக தனிமைச் சிறையின்
துருவேறிய கம்பிகளின் வழியாக
என்னை இரு கரம் நீட்டி அழைத்தான்.
முகம் முழுவதும் சிராய்ப்புகள்.
கணுக்காலில் துப்பாக்கிச் சூட்டின்
ஆறாத ஆழமான காயங்கள்.
அழுக்கேறிய சட்டைப் பையிலிருந்து
அவன் அம்மாவின் புகைப்படத்தை
என்னிடம் காண்பித்தான்.
உச்சரிப்புப்பிழையுடன் நம் மொழியில்
அம்மா என்றான்.
உன்னைப் பற்றி அறிந்துகொள்ள
அவன் மிகவும் ஆசைப்ப்ட்டான்.
உன் பெயரைக் கூட
அவன் மொழியில் என் கைகளில்
எழுதிக் காண்பித்தான்.
ஒரு தாயின் பரிசுத்தமான சினேகத்தை
பகிர்ந்து கொள்ள எங்கள் இருவருக்கும்
மொழி ஒரு தடையாகவே இருந்ததில்லை.
ஒரு நாள் அதிகாலை காவலர்களூடன்
சிறையில் இருந்து வெளியேறியவன்
மீண்டும் திரும்பவே இல்லை.
சிறைச் சுவர்களில் நம் மொழியில்
அவன் அம்மா என்று
உன் பெயரைத்தான் எழுதி இருந்தான்.
ஆதலால் உன் வரவேற்பு முத்தத்தை
இந்தத் தடவை இரட்டிப்பாகக் கொடு
பகைவன் நாட்டு பழைய நண்பனுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டும்
ஒரு வேளை மீண்டும் அவனை நான்
போர்க்களத்தில் சந்தித்தால்.