சுரண்டலை வென்ற உழைப்பின் களைப்பு
நிரம்பிய வினைஞர் ஓயும் முன்னே
முளையில் கிள்ளி எறிந்திட எண்ணி
வளைத்துப் பொருதிய ஈரேழு நாட்டையும்
கருவில் இருந்தே வீரமும் விவேகமும்
ஒருங்கே பெற்ற புரட்சிப் படைகள்
சமதர்ம அரசு பிறந்த நிலையில்
சமரை ஏற்று வென்ற போதிலும்
மகிழ்வும் களைப்பும் தடுத்தாட் கொண்ட
லெனினின் ஆளுமை வியப்பே அன்றோ
 
(சுரண்டலுக்கு எதிரான போரில் வென்ற உழைக்கும் வர்க்கத்தினர் (அதற்காகத் தாங்கள் ஈந்த உழைப்பால் ஏற்பட்ட) களைப்பு ஓயும் முன்பேயே, (தொழிலாளர்கள் அடைந்த வெற்றியை) முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் (சோவியத் ஒன்றியத்தைப்) பதினான்கு நாடுகள் சுற்றி வளைத்துப் போரில் ஈடுபட்டன. (புரட்சி எண்ணத்தை மனதில்) கருக்கொண்ட நாள் முதலாகவே வீரத்தையும் விவேகத்தையும் ஒருங்கே கொண்ட புரட்சிப் படைகள் சோஷலிச அரசு பிறந்த நிலையில் (அதாவது அரசு குழவிப் பருவத்தில் இருந்த பொழுதேயே) அப்போரை எதிர் கொண்டு வென்றன. இருந்தாலும் இவ்வெற்றியினால் மகிழ்வு அடையாமலும் (பெரும் உழைப்பினால்) களைப்பும் அடையாமலும் இருந்த லெனினின் ஆளுமை வியப்பை அளிக்கிறது)

- இராமியா