மௌனத்தின் சம்மதமாய்
மயங்கிச் சாய்கிறேன் உன் தோள் மீது
மடிந்து பரவுகிறது
நடுக்கத்தின் சலசலப்பும்
நடுநிசிப் பூக்களின் தகதகப்பும்
எனக்கான பிரியத்தை வெளிப்படையாய்
சொல்லிவிட்டுப் போக மனம்
உன் மடி தேடி அலைகிறது
நீயில்லாத கனவை நிச்சயமாய்
நான் கண்டிருக்க முடியாது
நீயில்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட
என்னால் நினைத்துப் பார்த்திருக்கமுடியாது
நான் என்கிற என்னுள் நீயே
முழுமையாய் நிலைகொண்டு
மீட்டெழமுடியா தொடர்கதையாய்
பயணித்துக் கொண்டிருக்கிறாய்
உன் நினைவலையை தடுத்த நிறுத்த இயலாமல்
உன்னோடு வாழ்ந்து போகிறேன்
ஒவ்வொரு இரவிலும்
அச்சம் மடம் நாணம் தொலைத்து
ஆதியிலிருந்து தொடங்குகிறேன்
இந்த இரவிலும்
உன்னைப் பற்றிய நினைவுகளை...
- வழக்கறிஞர் நீதிமலர்