நான் சிறுவனாக இருந்தபோது
என் இருப்பில் இருந்தது
ஏராளமான முத்தங்கள்.
அதிகமான முத்தங்களை
அம்மாவிற்குத்தான் கொடுத்திருப்பேன்..
அண்ணன் என்னைப் பற்றிக் கூறும்
உண்மையான குற்றச்சாட்டுகளை
நம்பாமல் இருப்பதற்கும்
அப்பாவித் தம்பியின் மேல்
நான் சுமத்தும் பொய்க் குற்றங்களை
நம்ப வைக்கவும்
எனக்கு உதவியிருக்கிறது
பெருமளவு இந்த முத்தங்கள்.
குற்றவாளிக் கூண்டில் அனைவராலும்
அசைக்க முடியாத சாட்சியங்களுடன்
நான் ஏற்றப்பட்டாலும்
கண்களை முட்டும் நீருடன்
நான் கொடுத்த முத்தங்களால்
அனைத்து குற்றங்களும் தள்ளுபடியாகும்
அப்பாவின் மறு விசாரணைக்கு
என்னை உட்படுத்தாமலே.
என் முதல் கல்லூரித் தோழியை
மிகவும் தயக்கத்துடன் உன்னிடம்
அறிமுகப்படுத்தும்போது கூட
பெரிதும் உதவி இருக்கிறது
இந்த முத்தங்கள்தான்.
அப்பாவிடம் என் காதலுக்கு
அனுமதி வாங்கித்தர
எனக்குத் தேவைப்பட்டது
ஒன்றிற்கு மேற்பட்ட முத்தங்கள்.
யார் தயவில் இனிமேல்
அம்மா இருக்கவேண்டுமென்று
அவளின் உறவுகள் தீர்மானிக்கும் சமயம்
அவள் கணக்கில் இருந்த
என் அத்தனை முத்தங்களையும்
என் மகனிடம் தாரைவார்த்து
முதியோர் இல்லம் விரைகிறாள்
அப்பாவின் நினைவுகளுடன்.
- பிரேம பிரபா
கீற்றில் தேட...
தாரைவார்த்த முத்தங்கள்
- விவரங்கள்
- பிரேம பிரபா
- பிரிவு: கவிதைகள்