கீற்றில் தேட...

அஜீரணத்திற்க்காக மாத்திரை விழுங்கி உறங்கிய இரவின்
கனவில் மகாபாரதத்து கிருஷ்ணன் வந்தான்
நீல நிறமாக இல்லாமல் கறுப்பாக இருந்தான்
எனக்கொரு மாத்திரை கொடு
அஜீரணமாகாத சொற்களால் அவதிப்படுகின்றேன் என்றான்
'எத்தனை நாட்களாக'
'எத்தனை யுகங்களாக என்று கேள்
யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்களை என் வாயில் திணிக்கிறார்கள்
ஒவ்வொரு நூற்றாண்டிலும் புதிது புதிதாக சொற்கள்
என்பெயரில் உலவும் சொற்கள் என்னுடையதல்ல
அது என் எச்சில்படுத்தப் பட்டதல்ல.
அது யாருடைய எச்சிலோ
எவனெவன் எச்சிலுக்கு நானெப்படி பொறுப்பாக முடியும்
இந்த அஜீரணக் கோளாறிலிருந்து என்னை விடுவி' என்றான்
'மாத்திரையில் சரியாகாது வாயைத் திற
அடேங்கப்பா உன் உடலுக்குள் சொற்கள்
கிரகங்களின் கழிவுகள் போல சுற்றிக் கொண்டேயிருக்கின்றன
எதை எடுப்பது?'
'எதையாவது எடு'
'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' எனும்
ஒரு வாக்கியத்தை உருவி வெளியே போட்டேன்
அந்த வாக்கியத்தை தன் காலில் போட்டு மிதித்தான்
'இந்த வாக்கியம் என்னுடையதல்ல
என்னையே அடிமையாக்கிய வாக்கியம்
அசுரர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்
அவர்களை ஏன் கொல்ல வேண்டுமெனக் கேட்ட போது
உதிர்த்த வஞ்சகம் தான் இது'
அவன் முகத்தில் திருப்தி தெரிந்தது
அதற்குள் அலாரம் அடிக்கத் தொடங்கியவுடன்
சத்தம் கேட்டு கதவைச் சாத்திக் கொண்டது கனவு.

- கோசின்ரா