கீற்றில் தேட...

kiss_soldier_379பாலுக்கு அழும் ஒரு குழந்தையின்
ஆரம்ப அழுகையை ஒத்த
எல்லையோரங்களில்
தொடர்ந்து பலவீனமாகக் கேட்கும்
எதிரிகளின் வெடிச் சிணுங்கல்களுடன்
வந்து சேர்ந்தது போர்க்களத்தில் இருந்து
எனக்கு ஒரு அவசர அழைப்பு மடல்.

கீற்றாக சில மேகச்சாட்டைகள்
அக்கினிப் பந்தை தட்டி எழுப்ப
இரவை மெதுவாக மென்று தின்னும்
பகலவனின் முதல் முற்றுகைப் போராட்டம்.

ஆளற்ற புகை வண்டித்தட மேடையில்
என்னை வழியனுப்ப காத்திருக்கிறாய் நீ..

நம் இருவரின் நெடுந்தூரப் பார்வையில்
அறுவடை முடிந்த வயல் வெளிகள்
காலை வெய்யிலில்
தங்கமென மினுமினுக்கிறது.

சீக்கிரம் போர் முடிந்து விடுமென
உன்னை நான் சமாதானப்படுத்த
பால் பிடித்த சோளக் கதிர்களின் மேல்
பறவைகள் அமரும் சமயம்
என்னைக் காண வந்து விடுவாயா என்று
குழந்தைத்தனமாக்க் கேட்கிறாய் நீ.

தொடர் மழை தணிந்து
அரை மனதுடன் மேகங்கள்
கலைந்து போன ஒரு மாலையில்
ஏக்கத்துடன் கடற் பறவைகள்
நம்மை கடந்து போகும் சமயம்
நாம் பகிர்ந்து கொண்ட மொத்த முத்தங்களை
மீண்டும் ஒருமுறை
சரி பார்த்து கணக்கிடுவதற்குள்
போர் முடிந்து மீண்டும்
நான் வந்து விடுவேனென்று
செல்லமாகச் சீண்டுகிறேன் உன்னை நான்.

போர் வீரனின் காதலி அழக்கூடாதென்று
உன் கண்களைத் துடைத்து
வழி அனுப்பு முத்தம் கொடுக்க
அவற்றையே பறவைகளின் பாட்டாக மாற்றி
என் துணைக்கு வழி அனுப்புகிறாய்
கண்களில் தளும்பும் கண்ணீரை
என் பார்வையிலிருந்து மறைத்தபடி.

- பிரேம பிரபா