நிலத்திலும் நீரிலும் உரிமை நாட்ட
நலமில செய்தோர் சிறையில் வாடவும்
வேலை யின்றியும் குறைக்கூலி யாலும்
சூலைக் கொண்டோர் தம்முயிர்ப் பேணும்
முயற்சியைக் குற்றம் என்றே உரைத்தும்
உயர்ந்தோர் என்றே கூறிக் கொண்டு
உடையோர் செய்யும் கயமை மறைக்கவும்
நடைபெறும் அரசு கடினம் ஆமே
உழவும் தொழிலும் உழைப்பவர் உரிமையில்
தழைத்த பின்னே அரசும் ஆட்சியும்
நொய்தல் போன்று எளிது தானே
((வரப்பு எல்லையாக உள்ள) நிலத்திலும் (மடை மாற்றம் செய்ய) நீரிலும் உரிமை நாட்ட வேண்டும் என்ற முனைப்பில் (ஒருவருக்கு ஒருவர்) விரும்பத்தகாத செயல்களைச் செய்தவர்கள் சிறையில் வாடிக் கொண்டு இருக்கவும், வேலையில்லாதவர்களும், போதிய அளவு கூலி கிடைக்காதவர்களும் தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கி, உயிரைக் காத்துக் கொள்வதற்றகாகச் செய்யும் செயல்களைக் குற்றம் என்று கூறுவதும், உயர்ந்தோர் என்று கூறிக் கொள்ளும் சொத்துடை வர்க்கத்தினர் செய்யும் கயமைகளை மறைக்கவும் நடத்தப்படும் அரசை நிர்வகிப்பது கடினமாகவே இருக்கும். (ஆனால்) உழவையும் தொழிலையும் உழைப்பவர்களின் உரிமையில் விடும் (பொதுவுடைமை) அரசு தழைத்த பின் அரசை நிர்வகிப்பது என்பது தக்கையைப் போன்று எளிதாகவே இருக்கும்)
- இராமியா