குத்தீட்டி போன்ற கூரோடும்
வலிமையோடிருக்கிற
கொம்புகள் முளைத்த
முதலாளிகளிடம் வேலை பார்த்ததில்
மிச்சமாய் தோன்றுவதென்னவோ
உயிர் மட்டும் தான்.
பரம்பரை சொத்தென
அப்பன் விற்கக் கூடாதென சொன்ன
நிலபுலன்களை விற்று
கையிருப்பும் கடனுமாய் சேர்த்து
சுயமாய் ஒரு தொழில் துவங்கி
அமர்ந்து இருக்கிறேன் முதலாளியாய்.
தொழிலாளர் சம்பளம் கேட்கையிலும்
விடுப்பு கேட்கையிலும்
நானே அறியாதபடி
முளைக்கின்றன கொம்புகள் எனக்கும்.
- பாரி மைந்தன்