கீற்றில் தேட...

தீக்குளி தமிழா தீக்குளி
உன் தேக்கு நிகர் தேகம் தீக்கிரையாகும் வரை
தீக்குளி தமிழா தீக்குளி
உன் புகழ் பாட நாங்கள் இருக்கிறோம்.

உனக்காக ஊர்வலம் போவோம்
ஆர்ப்பாட்டம் நடத்துவோம்
உண்ணா நோன்பும் இருப்போம்

உனக்காக மூன்று மணி நேரம்
உண்ணா நோன்பிருப்போம்
மூன்று நாட்களும் கூட உண்ணாமல் நோன்பிருப்போம்
ஆனால் மூசசை இழக்கும் வரை
ஒருபோதும் இருந்துவிட மாட்டோம்

தீக்குளி தமிழா தீக்குளி
உன் தேக்கு நிகர் தேகம் தீக்கிரையாகும் வரை
தீக்குளி தமிழா தீக்குளி
உன் புகழ் பாட நாங்கள் இருக்கிறோம்.

உன் மார்பளவு சிலையை
மேசை மேல் வைப்போம்
உன் முழு உருவச் சிலையை 
முச்சந்தியில் வைப்போம்
தெருவெங்கும் சுவரொட்டி ஓட்டுவோம்
உன் உயிர்ப்போரை ஒளி, ஒலிப் பேழையாக்கி
ஊரெங்கும் பரப்புவோம்.

தீக்குளி தமிழா தீக்குளி
உன் தேக்கு நிகர் தேகம் தீக்கிரையாகும் வரை
தீக்குளி தமிழா தீக்குளி
உன் புகழ் பாட நாங்கள் இருக்கிறோம்.

உன்னைப்போல் உயிரைவிடும் போராட்டத்தில்
இறங்க மாட்டோம்
எதிரியைப் போல் உயிரை எடுக்கும்
போராட்டத்தையும்
நடத்த மாட்டோம்

தீக்குளி தமிழா தீக்குளி

- முள்ளிக்கரை முகிலன்