ஆசையும் மோகமும்
அளந்தளித்த வளங்கழிந்தபின்
அன்றாட ஆர்ப்பாட்டங்களிலும்
அலுவல்களின் கசகசப்பிலும்
லௌகீகக் கணக்குத் தீர்க்கும்
அவசரச் சிடுசிடுப்பிலும்
கொண்டாடியும் குறைசொல்லியும்
குதூகலித்த காதலை
பரிமாறிக் கொண்டே
மிச்சம் வைக்கும் கலையைக்
கைவிடக் கூடாதென்ற
தீர்மானம் கவனக் களைப்பால்
மறக்கடிக்கப்பட்டது
நினைப்பதற்கு மட்டுமே இருக்க வேண்டிய
நன்றியை நினைவு கூர்ந்தாற்போல
காதல் உயிர்ப்பைக்
கவனப்படுத்திய பொழுதின் முடிவில்
நிகழ்த்திப் பார்க்க
நினைத்த கணத்திலிருந்து
தொடங்கியது
நம்மை உணர்த்தி நாம் சுவைத்த
காதலின் மீள்வாசிப்பு.
கீற்றில் தேட...
மீள்வாசிப்பு
- விவரங்கள்
- துரைகுமரன்
- பிரிவு: கவிதைகள்