கீற்றில் தேட...

அங்கம் தனிலே பங்கம் இருப்பினும்
மங்கிய மனதுடன் பிறந்திட்ட போதிலும்
இயலா நிலைமைக்கு இரங்காது இம்மண்
முயலும் மனிதர் உழைப்பை ஈந்து
உற்றதைக் காப்பது சமூகக் கடமை
சுற்றம் வாழ வேண்டிய பொருள்பெற
மண்ணே தாயென உழைப்பே தந்தையெனத்
திண்மையாய் இருப்பது இயற்கையின் நிபந்தனை

(ஒருவர் உடல் உறுப்புக் குறையுடன் பிறந்து இருந்தாலும், மன வளர்ச்சிக் குறைவுடன் பிறந்து இருந்தாலும் (அவர்களால் உழைக்க) முடியாத நிலைமையைக் கருதி (உழைக்காமல் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கு) பூமி இரக்கம் காட்டாது. உழைக்க முடியக் கூடிய மற்ற மனிதர்கள் தங்கள் உழைப்பை ஈந்து அவர்களைக் காப்பது சமூகக் கடமையாகும்.  மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை, இப்பூமியைத் தாயெனக் கொண்டும் உழைப்பைத் தந்தையெனக் கொண்டும் பெற வேண்டும் என்பது இயற்கை விதித்துள்ள (மாற்ற முடியாத) நிரந்தர நிபந்தனையாகும்)

- இராமியா