தனக்குத் தானே..
பேசிக்கொள்ளும் மனிதர்கள்
இந்த உலகத்தின்
உரையாடலில் இருந்து
முற்றிலுமாக துண்டிக்கப்பட்டவர்கள்..!
இருட்டைக் கடப்பதற்காக
பாடுபவர்களைப் போல..
குளியல் அறையில்
தாழிடப்படாத கதவுகளுக்காக
இசைப்பவர்களைப் போன்றவர்கள் அல்ல
இவர்கள்..!
தனித்த அறையில்
கைவிடப்பட்ட காதலுக்காக
கண்ணீர் சிந்துபவர்கள்..
கடவுளுடன் பேசுவதற்கான
இரகசிய மொழியை
தெரிந்து வைத்திருக்கிறார்கள்..!
நடைபாதையில்
யாருமற்று நடப்பவர்கள்
நம்பகத் தன்மையை இழந்து விட்ட
உறவுகள் குறித்து
காற்றோடு கைவீசி
பேசிச் செல்கிறார்கள்..!
எல்லாவற்றையும் இழந்து விட்ட
ஒரு மனிதன்
தன்னோடு தான் பேசித்திரிவது
பைத்தியமாவதற்கான
ஒரு முன் முயற்சியல்ல..!
அது ஒரு பரவசமான..
தியான அனுபவம்..!
கைவிடப் பட்ட சாத்தானின்
பாவ மன்னிப்பு..!
கடவுளை திகைக்கச் செய்யும்
ஒரு திடீர் ஏற்பாடு..!
- அமீர் அப்பாஸ்