கீற்றில் தேட...

ஒரு மாயவித்தைக்காரனின் கைப்பிரம்பிலிருந்து
விரியும் ஜாலமென விரிகிறது வாழ்க்கை
ஒவ்வொரு காட்சியாய்.

வெறும் காலிப்பாத்திரத்திலிருந்து
புறாக்களைப் பறக்கவிடுகிறது.

எப்படியோ-
ஒரு கைக்குட்டையைப் புடவையென நீட்டுகிறது.

கண்ணுக்குத் தெரியாமல்
ஓடி விழிக்கிறது கவிழ்க்கப்பட்ட
பாத்திரத்திலிருந்து...முட்டையென.

நதியின் குளிர்ச்சி பெருக்குகிறது
காலுக்கடியிலிருந்து.

நாளைய செய்திகளைச் சொல்கிறது.

வசீகரிக்கும் தந்திரங்களால்...
முனையில் அமர்த்துகிறது....
பார்வையாளனை.

தந்திரக்காரனின் கபட விழிகளின்
ஆழம் தெரியாமல்...
காட்சியை இரசிக்கிறது.

அரங்கம் நீங்கி வெளியேறுகையில்...
பிரமைகளால் நிரம்பி விடுகிறது...

கொஞ்சம் திருப்தியுடனும்...
கொஞ்சம் அவநம்பிக்கைகளுடனும்.