கடிகாரத்தின் முட்களால்
காயப்படுத்தப்படாத
ஆடுகளின் காலம் அலைகிறது
மேய்ச்சல் நிலத்திற்கும்..
பட்டிக்குமிடையே
அவை எழுப்பும் ஒற்றைச் சப்தத்தினூடாய்.
மேய்க்கும் இடையனின் காலம்
கடவுளால் காயப்படுத்தப்பட்டுவிட...
மேய்ச்சல் நிலங்களுக்கு வெளியே
தனது கனவுகளைப் புதைத்தவன்..
திரியும் மேகங்களில் உறங்கிக் கொள்கிறான்
ஆடுகளைத் தவிர்த்தபடி.
தழை விரும்பும் ஆடுகளுக்குக்
கிடைத்துவிடுகின்றன
மேய்ப்பவனுக்கு மறுதலிக்கப்பட்ட உணவு.
எப்பொழுதும் அந்தியில்
எண்ணிப் பார்க்கையில்-
பட்டிக்குத் திரும்பும்
ஆடுகளின் எண்ணிக்கையில்
ஒன்று கூடுதலாகி விடுகிறது....
வாழ்வின் கணிதத்தைத்
தவறாக்கியபடி.