காற்றின் நீர்த்திவலைகளை
தன்னிடமாய் ஈர்த்துக்கொண்டது
மேகம்...
இருளத்தொடங்கியது
வானம்....
சில்லென்ற காற்று
மரத்தின் தலையை
மெதுவாய்க்
கலைத்துவிட்டது...
கொட்டித் தீர்த்தது
மேகம்...
மரத்தின் கூரையின்வழியே
ஒழுகிக்கொண்டிருந்தது
மழை ...
நனைந்துவிடாதபடி
கவனமாய்
மிக கவனமாய்
கதவருகே நின்றபடி
மழையை
ரசித்துக் கொண்டிருந்தேன்...
என்றாலும்
சில துளிகள் என்மேல்
தெறிக்கத்தான் செய்தன...
தெறித்த துளிகளை
என்னால் ரசிக்காமலிருக்க
முடியவில்லை...
சிறிது நேரத்தில்
இருளத்தொடங்கியது
என் வானம்...
என்னுள்
ஒழுகத்தொடங்கியிருந்தது
மழை...
- தனி (
கீற்றில் தேட...
இருளத்தொடங்கியது என் வானம்
- விவரங்கள்
- தனி
- பிரிவு: கவிதைகள்