யாருடனும் பகிர்ந்து கொள்ள இயலாத
எனக்கேயான இரகசியங்களை
எழுதி வைத்திருந்தேன்
எனது நாட் குறிப்பில்.
விடலைத்தனத்தின் புன்னகையோடு
எனது பழைய முகத்தோடு
திரிந்து கொண்டிருந்தது அதன் பக்கங்கள்.
வார்த்தைகள் வடிகாலாகிவிட...
எனது வருத்தங்களும்...
இயலாமையின் கோபங்களும்
வழிந்தோடிக் கொண்டிருந்தது
அதன் சில பக்கங்களில்.
அந்தக் கணம்தான் பிறந்த
காலை இழுத்து நகரும்
ஒரு நாய்க்குட்டியின் மிரட்சி நாட்களும்
அதில் இருந்தது.
யாரும் அறியாமல் பாதுகாத்ததை
பழைய வாசனையால் அறிந்துகொண்டுவிட்ட
கறையான்கள் என் நாட் குறிப்பைத் தின்று செரிக்க-
மழைக் காலத்தில்
ஈசலாகிப் பறக்கும் கறையான்களைப்
பார்க்கையில்-
அதன் மெலிந்த சிறகுகளில்...
பறந்து...பறந்து அடங்கி
ஒரு நாளில் இறந்துவிடுகிறது
என் பழைய நினைவுகள்.