கீற்றில் தேட...

உனது முதுகின் மேல்
பயணித்துக் கொண்டிருக்கிறது
ஒரு சிலுவை.

எனது முதுகின் மேலும்
வேறொரு சிலுவை
வேறொரு பரிமாணத்துடன்.

நம் ஒவ்வொருவரின் முதுகிலும்
ஒரு சிலுவை இருந்தது....
அதனதன் நீள...அகலங்களுடன்.
 
நம் முள்கிரீடங்களிலிருந்து
வழியும் இரத்தத்தைச் சுவைத்து
உயிர் வாழ்கிறது சிலுவைகள்.

வலிகளோடும்...வாதைகளோடும்
நாம் தொடரும் பயணத்தை
ஒய்யாரமாய் நம் முதுகில் சாய்ந்தபடி
இரசிக்கிறது சிலுவை.

பின்னொரு நாளில்..
நாம் எரிக்கப்பட்ட பொழுதிலும்
உயிர்த்தெழும் சிலுவை.....

எளிதில் கண்டெடுத்துவிடுகிறது
தனக்கான முதுகை.

பின்...
ஒய்யாரமாய் சாய்ந்தபடி..
பயணிக்கிறது
சுமப்பவனின் எல்லைகளுக்கு
அவனின் வலியை இரசித்தபடி.