போட்டியில் திறமை வெளிப்படும் என்றே
கேட்டினை விளைக்கும் சந்தை விதிகளால்
வேலை யின்றி வாடும் தோழனே
தோலைப் பெற்றுச் சுளையைக் கொடுத்தன்ன
குறைவாய் ஊதியம் பெற்றிடும் தோழனே
நிறைவாய்க் கொடுப்பது போன்ற மாயை
கணினித் துறையில் உள்ள போதிலும்
பணியின் சுமையால் குருதி அழுத்தம்
உயர்ந்து தவிக்கும் மென்பொருள் தோழனே
வியந்திட வேண்டாம் முதலிச் சமூகம்
இருந்திடும் வரையில் விடுதலை இல்லை
அருமைத் தோழரே சமதர்மம் அமைக்கச்
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகுஓய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பாடு அன்று சமதர்ம விளைவு
மெய்வருத்தக் கூலியின் அறமது தானே

((சந்தையில் நிலவும்) போட்டியினால் தான் (மனிதர்களின்) திறமை வெளிப்படுகிறது என்று (கூறி) கேடுகளை விளைவிக்கும் சந்தை விதிகளால் வேலையின்றி வாடும் தோழனே! தோலின் மதிப்பு அளவிற்குக் கூலியைப் பெற்று, சுளை முழுவதையும் (முதலாளிக்கு) இலாபமாகக் கொடுத்துவிட்டு, குறைந்த வருவாயில் வேலை செய்யும் தோழனே! அதிகமான ஊதியம் கொடுப்பதாக ஒரு மாயையை உருவாக்கி உள்ள கணினித் துறையில், பணியின் சுமையினால் இரத்த அழுத்தம் உயர்ந்து தவிக்கும் மென்பொருள் தோழனே! இந்த முதலாளித்துவ அமைப்பு உள்ள வரையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை என்பதில் வியப்பு அடைய வேண்டாம். அருமைத் தோழர்களே! (நீங்கள் அனைவரும்) சோஷலிச சமூகம் அமைக்கச் சென்றால் (அனைத்துச்) செல்வமும் உடையவர்கள் ஆவீர்கள். இது விறகு வெட்டப் போனவர்கள் தங்கப் புதையலைப் பெற்றது போன்ற அதிர்ஷ்டம் அல்ல; சோஷலிசம் என்பது  தான் மெய்வருத்தக் கூலியின் அறம் ஆகும்)

- இராமியா