கீற்றில் தேட...

புரட்சிப் பாதையின் கரடும் முரடும்
அரசியல் ஞானத் தெளிவுக் குறைவும்
கள்ளச் சந்தையின் சார்பாய் விரட்டி
தள்ளிப் போடலாம் புரட்சியை என்று
மேதை லெனினின் காலம் தொடங்கி
புவிவெப்ப உயர்வுக் காலம் தனிலும்
சொல்வதன் காரணம் அச்சமும் ஆசையும்
புரட்சியை முன்னே எடுத்துச் செல்ல
உரமாய் நெஞ்சும் விடுதலை உணர்வும்
சாலச் சேர்ந்து இருப்பதே போதும்
காலமும் வேண்டாம் நேரமும் வேண்டாம்.
 
(புரட்சிப் பாதையின் கரடு முரடான தன்மை ஏற்படுத்தும் அச்சமும், அரசியல் அறிவில் தெளிவு இன்மையால் ஏற்படும் ஆசையும் தான், கள்ளத்தனத்தை உள்ளே கொண்ட, சந்தை முறைக்குச் சார்பாய் விரட்டி (புரட்சிக்கான காலம் கனியவில்லை என்றும், முதலாளித்துவ அமைப்பு ஆற்ற வேண்டிய பணி இன்னும் உள்ளது என்றும், ஆகவே) புரட்சியைத் தள்ளிப் போடலாம் என்றும் மேதை லெனினுடைய காலத்தில் இருந்து (முதலாளித்துவ முறையால் தேன்றி, வளர்ந்து, உலகை அழிக்க அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் இன்றைய) புவி வெப்ப உயர்வுக் காலத்திலும் சொல்வதற்குக் காரணம். புரட்சியை முன்னே எடுத்துச் செல்வதற்கு உரமான செஞ்சும், விடுதலை உணர்வும் நல்ல முறையில் சேர்ந்து இருப்பது ஒன்றே போதும்.  காலத்திற்காகவும் நேரத்திற்காகவும் காத்திருக்க வேண்டியது இல்லை)

- இராமியா