வாழ்வின் அந்திமத்தில் நீ
உன் காலடியில் நான்
உன்னால் தொலைக்கப்பட்ட
என் மகிழ்ச்சியைத் தேடிச் சென்றுவிட்டது
என் இளமை
உன் திமிரும் மெத்தனமும்
உன் இளமையோடு கூடிவிட்டு
முதுமையைக் கண்டதும்
முக்காடு போட்டு மறைந்துவிட்டன
நீ பார்த்து ரசித்த கன்னிகளும்
பேசிச்சிரித்த பாவைகளும்
உன் இருப்பைத் தேடவில்லை
உன் இச்சைகளில்
இன்ப ருசி கண்டவர்கள்
ஆசைகளால் ஆளப்பட்டவர்கள்
எவரும் இங்கில்லை
இப்போதும் உன் தேவைகளைத்
தீர்ப்பதற்கென்றே
உன்காலடியில் நான்
உன்னால் தொலைக்கப்பட்ட
என் வாழ்வின்
வசந்தம் இனி எப்போதேனும்
திரும்பி வருமா
- அமானுஸ்யா