கீற்றில் தேட...

நான் தோல்விகளை வலிந்து வாங்கிக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைச் சுகமாக அசைபோட்டுக் கொள்ள

நான் மறுதலிப்புகளை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதன் காரணங்களை அசைபோட்டுக் கொள்ள

நான் உதாசீனங்களை உவந்து ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அந்தக் காட்சிகளை மனதினில் மீள ஓடவிட்டுப் பார்த்துக்கொள்ள

நான் அவமானங்களை அமைதியுடன் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அத்துமீறுதல் எங்ஙனம் என்பதைக் கற்றுக்கொள்ள

நான் கடும்சொற்களை கவனித்துக் கேட்டுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
அதைக் கடந்து செல்லுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள

நான் புறக்கணிப்புகளை முகம் கோணாமல் ஏற்றுக்கொள்கிறேன்
பின்னர் தனிமையில் அமர்ந்து எனக்குள்
வரவேற்புகள் பெறுதல் எங்ஙனம் என்பதை அறிந்துகொள்ள

இதுபோன்ற கவிதைகளை வாசித்த
பின்னர் தனிமையில் அமர்ந்து
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்
மேற்கூறியவற்றைக் கடந்து செல்ல இயலாமல் தத்தளிக்கும்போது
நானும் உங்களில் ஒருவன் என்பதை அறிந்துகொள்ள.

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)