கீற்றில் தேட...

பிரேதங்கள் பயணிக்கும் நெடுஞ்சாலையில்
எப்போதோ வீசியெறியப்பட்ட
என் உடல்
சொற்களை உமிழ்ந்தவாறு
உயிர்ப்புடன் இன்னும்.
எல்லா கட்டங்களை
நிரப்பிய பின்னும்
முடிவில்லாமல் நீள்கின்றன
புதிய கட்டங்கள்.
43 வருடங்களுக்கு முன்
நான் என்னவாக இருந்தேன்?
ஒரு வேளை அது
நானே இல்லையென்றால்
என்ன அது?
என்னவாக இருந்தால் என்ன?
அதற்கு மொழியின் தேவையோ
கேள்வியோ இருந்ததோ?
வலியோ இன்பமோ உணரப்பட்டதோ?
ஓ...முடிவே
எங்கே ஒளிந்திருக்கிறாய் நீ...

--------------------------------------------------------------------------------

நெடுஞ்சாலையில் பூத்த மலர்

நெடுஞ்சாலை நடுவில்
அகல விரிந்த கண்களுடன்
தலை தப்பிய சிறு நாய்..
யாரோ பாடம் பண்ணி வைத்தாற்போல்
தலை தவிர அனைத்தும்
நசுங்கிப் பாயாகி
காட்சிப் பொருளென்றானது.

கருணை உள்ளம் கொண்ட
வாகன ஓட்டிகளோ
தலை தவிர்த்து
உடல் மிதித்து சென்றனர்.

மலங்க விழிக்கும் நண்பா!
இனி...
நிமிர்ந்த தலை
தாழ்த்தினாலே போதும்..
சமன் செய்ய.

--------------------------------------------------------------------------------

தொடர் வண்டி

சதா
அழகை உமிழ்ந்தவாறு இருக்கும்
அந்த
சீருடைப் பெண்ணின் முகம்.
தெருவைக் கடக்கும்
அந்த
கோணல் வாய் கிழவனுக்கோ
வயது தொண்ணூறு.

--------------------------------------------------------------------------------

சமரசம்

உருவேற்றி அழிக்கும்
மாய வித்தைக்காரன்
எவனென்று அறியாமல்
ஊமை கடவுளர்கள்
உரிமை கொண்டாடின...

பிளக்கவும் விலக்கவும் முடியாதெனெ
உணர்ந்து “வெளி”யினூடே சமரசம்
கொள்ளலாயிற்று.

சவுகரியங்களும் பாடுகளும்
முன்னிழுத்துச் செல்ல
‘கால வெளித் தத்துவம்’
காணாமல் போயிற்று.

இதுவும் கடந்து போகுமென
மகிழ்ச்சியும் துயரமும்
நிரந்தரமின்மையில்
மூழ்கி மறைந்தன.

- வீ.சுரேஷ் குமார்