கீற்றில் தேட...

காதலிக்கத் தொடங்கும் போதே வெளியேறி விட்டாள்.
கடுகளவு கூட தயக்கமில்லை.
வெளியேறிவிட்டாளென்பதைக் கூட அறியவில்லை
கேட்கமுடியாது கேட்டால் உனக்குள் எப்போது வந்தேனென்பாள்
ஞாபகமறதிக்காரி
உதடுகள் வழியே அவள் வெளியேறியிருக்க முடியாது
முத்தங்கள் உடலின் மூடி வைத்த கதவுகளை
திறந்து விடுகின்றது என்பாள்
கண்களின் வெளிச்சத்தில் வெளியேறியிருக்க முடியாது
உங்கள் கண்கள் கூர்மையாக கவனிக்கிறதென்று சொல்லியிருக்கிறாள்.
எப்படி வெளியேறினாள் தெரியாது
எனக்கு முன்பு நடந்து போய்க் கொண்டிருக்கிறாள்
எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை யென்பதைப் போல
புதிதாக அவளைக் காதலிப்பவர்கள் சொல்லக் கூடும்
அவள் தன் உடலில் நடந்து கொண்டிருப்பதாக.