கனத்துக் கொண்டேயிருக்கிறது
கழுத்தில் கட்டிய தாலியும்
காலில் பூட்டிய மிஞ்சும்

சாதி மத வருண வேர்களைத்தேடி
சாதகப் பொருத்தம் பல பார்த்து
நல்ல பெண் சான்றிதழ் பெற்று
நகைநட்டு சீர்வரிசை பேசி தன்னை
ஒழுக்கசீலனாய் முகம்காட்டி
மணம் முடித்துப் போனான்- அன்று

பற்றிக்கொள்ளும் தீயின் நாவும்
சீழ்பிடித்த வக்கிரப் பேச்சுமாய்
சந்தேகச்சூடு உடல் முழுக்க இழுத்தபடி
அவளின் தேகம் இரணத்தின் குறியீடுகளாய்
அச்சத்தின் வெளியில் அசைவாடியது இன்று

கட்டாயத்தின் பேரில்
படுத்துறங்கிய எத்தனையோ இரவுகளில்
செத்து செத்து பிழைத்திருப்பாள்
விசம்தடவிய அவனின் நாக்கு
தசைவெறியோடு தீண்டிய போதெல்லாம்
தலைவிதியேயென மரணித்துப் போயிருப்பாள்

எத்தனை நாள் காத்திருந்து
சம்மதம் பெற்றார்களோ தெரியவில்லை

அம்பள ஆயிரம் குட்டியசுவரு தாண்டுவான்
ஆயிரம் காலத்து ஆணாதிக்கக் குரல்களில்
அமைதியின்றி தவிக்கிறது
அவளின் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும்

வீதியெல்லாம் காமகளியாட்டமாடும்
விலைமகனுக்கு மனைவியாய் வாழ
இருபதாண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள்
இலக்கண வரையறையின் கோரப்பிடிக்குள்

ஆண்மைய உறைக்குள்
பதப்படுத்தி வைக்கப்பட்ட அவளின் பெண்மை
தகனம் செய்யப்படலாம் எப்பொழுதேனும்
ஓவ்வொரு ஆண்மைய வெளிக்குள்ளும்
வளைந்து கொடுத்து
வலிந்து சுமந்த வலிகள் அத்துணையும்
பெண்ணுக்குப் புதிதல்ல
பழக்கப்படுத்தப்பட்டவைதான்

- நீதிமலர், வழக்கறிஞர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)