கோடையில் தகிக்கும்
பாலை சுடுமணலாய்
நானும் கிடந்தேன்..!
பருவம் தப்பிய பெருமழையாய்
என்னை நனைத்தாய்..!
பெயரிடப்படாத உறவொன்றின்
நெடுஞ்சாலையில் பயணிக்கிறேன்..
சாலையோர நிழலாக..
நீயே தொடர்கிறாய்..!
மரண தண்டனைக் கைதியை
நீதியின் வாசலில் நிறுத்தி
விசாரிக்கும் வேளை..
கருணையை யாசிக்கும்
கண்களைப் போல..
உன் கண்களை
சந்திக்க மறுக்கிறேன்..!
கணங்களில்..
கடந்து போகும் வாழ்வை
ஏன் ஒரு கணம்
நிறுத்தி வைத்து விட்டாய்..!
சுவாசிப்பதை..
கணக்கில் வைத்துக் கொள்ள
முடியாத உயிரினைப்போல..
உன் உறவின் நீள அகலத்தை
என்னால் நிர்ணயிக்க முடியவில்லை..!
நம்ப மறுக்கும்
சூழலைத் தந்து விட்டு
”நம்பிக்கை” ஒன்று தான்
வாழ்க்கை என்கிறாய்..!
கடவுளைப் போல
கண்களில் படாமல்..
காதல்
வாழ்ந்து கொண்டே இருக்கிறது..!
சாத்தானைப் போல
கேள்வியை முன்னிறுத்திய போதும்
பதிலற்ற மெளனங்களே
பதிலாகத் தொடர்கிறது..!
- அமீர் அப்பாஸ்