கீற்றில் தேட...

*
நிராசையின் நினைவுக் கூட்டில்
புழுங்கிச் சுருங்கும் வதையின் மீது
சுள்ளெனத் தொடுகிறது
சொற்களின் ஊடே கசியும் உனது வெயில்

அறைக்குள் அலையும் நிழல்கள்
எதுவும் பேசுவதில்லை
ஜன்னலில் மோதி உடைந்து
அங்கேயே விழுந்து சாகிறது அதன் மூச்சுக் காற்று

கைவிடப்பட்ட அர்த்தங்களின் செதில்கள்
அசைந்து சோர்ந்த அக்கணத்தை
இருப்பின்மையின் மைய பீடத்தில் பலியிட
ஓங்குகிறேன் இன்னொரு சொல்லை

அலறும் மௌனத்தோடு தலை தொங்கி
குழம்பும் சிந்தனையின் மீது
பெயர் தெரியா பறவையின் நீல நிற இறகொன்று
காற்றில் சுழன்று மெல்ல இறங்குகிறது

அறை முழுவதும் பரவுகிறது
நிராசையின் நீல நிறம்

*****

-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )